ck

1967 தமிழ்நாடு பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்க.... அதையறிந்து அண்ணா சொன்ன ஒரு விஷயத்தை, ஒருசில தலைவர்களிடம் அண்ணா சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட... அந்த ரகசியத்தைச் சொல்வதாகவும், அதற்குமுன் சில விஷயங்களைச் சொல்வதாகவும் சொல்லியிருந்தேனில்லையா... காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் எனது பி.யூ.சி. படிப்பு முடிந்தது. அண்ணாவின் பக்கத்து வீட்டில் வசித்துக் கொண்டு, படிப் புடன் அண்ணா வை தினமும் பார்க்கிற அந்த நாள் இனி எப் போது கிடைக்கும் என்கிற ஏக்கத் துடன்... அண்ணா வைச் சந்தித்து விடைபெறுவதற் காகச் சென்றேன்.

"படிப்பு முடிஞ்சது; நான் மெட்ராஸ் போறேன். நான் யாழ்ப் பாணத்துல நாடகங்கள் போட்டிருக்கேன். "புலித்தேவன்' நாடகத்த பத்து தடவை போட்டிருக்கேன். என்னோட நடிப்புல சிவாஜி சார் சாயல் இருக்கும்னு நாடகம் பார்க்கிறவங்க சொல்வாங்க. "யாழ்நகர் சிவாஜி'னு பத்திரிகைகள் கூட நாடக விமர்சனத்துல என்னைக் குறிப்பிட்டிருக்கிறாங்க. சிவாஜி கணேசன் சார் "பராசக்தி' மூலமா இன்னைக்கி பெரிய ஹீரோவாயிட் டார். அவரு நடிகரானதுக்கு காரணம் நீங்கதான். உங்களோட "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்துல நடிச்சதுனால பெரும் புகழ்பெற்றார். வி.சி.கணேசனா இருந்தவரை அந்த நாடகத்தப் பார்த்திட்டு "சிவாஜி'னு பெரியார் தான் சிறப்புப் பேர் வச்சு அழைச்சார். இதுக்கெல்லாம் மூலகாரணம் நீங்கதான். இப்போ நான் மெட்ராஸ் கிளம்புறேன். நான் சினிமாவுல நடிக்க நீங்கதான் எனக்கு சிபாரிசு செய்யணும்' என்றேன்.

என்னை மிக ஆழ்ந்து நோக்கிய அண்ணா, "நீ மூணு நாள் கழிச்சு வந்து என்னைப் பாரு' என்று சொன்னார். நானும் தலையாட்டிவிட்டு சந்தோஷமாக வந்து, சென்னை கிளம்புவதை மூன்று நாட்கள் தள்ளிப் போட்டேன். சொன்னபடி மூன்றாம் நாள், அண்ணாவின் முன்பு போய் நின்றேன்.

Advertisment

"நீ கேமரா முன்னாடி நிக்காத; கேமராவுக்கு பின்னாடி நில்லு. அதுதான் ஒன்ன நீண்ட காலத்துக்கு சினிமாவுல வச்சிருக்கும்' என்றார்.

"அறிந்து கொள்ளாமல் சொல்லமாட்டாரே பேரறிஞர். அதிலும் எனக்கு மிகவும் பிடித்தவரான அண்ணா சொல்வதை எப்படி மறுப்பது? அண்ணாவின் சொல்லுக்கு நான் அப்பீல் செய்வேனா என்ன?!'

மிக்க மகிழ்ச்சியோடு அவர் சொன்னதை மனதில் வாங்கிக்கொண்டு சென்னை கிளம்பினேன்.

Advertisment

அண்ணாவின் சொல்லுக்கு என்னிடம் அப்பீல் இல்லை. ஆயினும் என் தோற்றமும், கம்பீரமான குரலும் எனக்குள் நடிப்பாசையை முழுக்க நமத்துப்போகச் செய்யாமல் வைத்திருந்தது. மற்றவர்களும் "நீ நடிக்கலாமே!' என சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இ.ஈர்ம்., பட்டப்படிப்பில் சேர்ந்தேன். புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் அண்ணன் ராஜசிங்கம் வீட்டில் தங்கிக்கொண்டு, சைக்கிளில் சேத்துப்பட்டிலிருந்த கல்லூரிக்கு சென்றுவருவேன்.

cc

ஒரு ஞாயிற்றுக்கிழமை! வீட்டு வரவேற்பறையில் அண்ணன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். "தம்பி...' என என்னை அண்ணன் அழைத்தார். போனேன். "இவர் பேரு நடராஜன். புரசை கிட்டப்பா கலையரங்கத்தின் செகரட்ரி. நீங்க சைக்கிள்ல காலேஜ் போகும்போது நிறைய தடவை பார்த்திருக்காராம். உங்களை ஹீரோவா வச்சு, கிட்டப்பா கலையரங்கம் மூலம் புது நாடகம் போடப்போறாராம். உங்கள நடிக்க கேட்டு வந்திருக்கார்' என அண்ணன் சொல்ல... நான் ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டு நின்றேன்.

"பலபேர் வாய்ப்புத் தேடி அலையிறாங்க. எனக்கு வாய்ப்பு, எங்க வீட்டு வரவேற்பறைக்கே வந்துருக்கே' என நினைத்தாலும், பதில் சொல்லாமல் தயங்கி நின்னேன்.

"கிட்டப்பா கலையரங்கம் நல்ல சபா. உங்க படிப்பு கெடாம நீங்க நடிக்கிறதா இருந்தா நடிங்க' என்றார்.

உடனே ஒப்புக்கொண்டு ஒத்திகைக்குப் போக ஆரம்பித்தேன். நாடகத்தின் பெயர் 'ஐஞர பஞ கஒயஊ' -வாழ்வதெப்படி? எழுதி, இயக்கியவர் எம்.எஸ்.மணி, வில்லனாக நடித்தவர் ரகு. ஜோதிநாயகம், நாகராஜ் உட்பட சிலரும் நடித்தார்கள். அவர்கள் எல்லோரும் வெகுசீக்கிரமே என் நண்பர்கள் ஆனார்கள். சென்னை எக்மோர் மியூஸியம் தியேட்டரில் நாடகம் அரங்கேற்றமானது. என் நடிப்பு பாராட்டப்பட்டது. பல தடவைகள் அந்த நாடகம் நடத்தப்பட்டது.

நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தொடர்ந்து வந்தபடியே இருந்தன. இன்னொரு புறம்... திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து, திரைக்கலையை கற்றுக் கொண்டிருந்தேன். அண்ணா அவர்கள் என்னை கேமராவுக்கு பின்பாக.... கதாசிரியனாக இருக்கச் சொன்னாரல்லவா.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்ணா வின் வீடு இருந்தது. (இன்றும் அவரது நினைவிடமாக இருக்கிறது). நான் அடிக்கடி சென்று அண்ணாவைப் பார்ப்பதுண்டு.

1967- தேர்தல் காரணமாக அண்ணா மிகவும் பிஸியாக இருந்தார். ஆனால் வெற்றி- தோல்வி பற்றியெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

ஓட்டுப்பதிவு முடிந்து, வாக்கு எண் ணிக்கை தொடங்கும் நாளில், நான் அண்ணா வின் வீட்டிற்குச் சென்றேன். வானொலியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரம் சொல்லப்பட்டு வந்தது. "தி.மு.க. முன்னிலை, தி.மு.க. வெற்றி, தி.மு.க. கூட்டணி வெற்றி, தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது' என்றே காலையிலிருந்து செய்திகள் வந்தது. ஒருவழியாக முழு முடிவுகளும் வந்துவிட்ட நிலை யில்... அண்ணாவிடம் சில தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். நான் அருகே இருந்து அண்ணாவையே பார்த் துக் கொண்டிருந்தேன்.

அண்ணாவின் முகத் திலும் மகிழ்ச்சிதான். ஆனால் அதை மீறி புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வு அவரின் முகத்தில் பரவியிருந்தது.

"அடுத்த எலெக் ஷன்ல தான் (1972) திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக் கும்னு நினைச்சேன். ஆனா... மக்கள் இப்படி புளிய மரத்தை உலுப்பின மாதிரி உலுப்பி வெற்றியை நமக்கு குவிச்சிட்டாங் களே...' என்றார் அண்ணா.

அண்ணாவின் வீட்டு முன்பு தேசியக் கொடி பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் வந்து நின்றது. சில அதிகாரிகள் அண்ணாவிடம் வந்து "அய்யா... பதவியேற்கப் போறீங்க... அதான் அழைச்சிட்டுப் போக வந்தோம்' என்றார்கள்.

"நான் பதவியேற்ற பின்னாடிதானே முதலமைச்சர். அதற்குப் பிறகுதானே அரசாங்க காரை பயன்படுத்த முடியும்? இப்ப நான் ஒரு கட்சியோட பொதுச்செயலாளர் தானே! நீங்க காரை எடுத்துக்கிட்டுப் போங்க. பின்னாலே வேற கார்ல நான் வர்றேன்' என அவர்களை அனுப்பிவைத்தார்.

அருகே இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம் "ராஜு... ஒன்னோட கார் எங்க?' எனக் கேட்க...

"அதோ... வாங்கண்ணா போலாம்' என தன் காரில் அண்ணாவை அழைத்துச் சென்றார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அண்ணாவின் மனைவியார் ராணி அண்ணியார் கிளம்பியபோது... "இது குடும்ப விழா இல்ல... அர சாங்க விழா. நீ வந்தா, உனக்கு முன்னுரிமை கொடுக் கணும்ங்கிற நெருக்கடி போலீஸ்காரங்களுக்கு உண்டாகும். வீட்ல இரு' என சொல்லிவிட்டுப் போனார். பதவியேற்புக்குப் பின்... தேசியக்கொடி பொருத்திய அரசாங்க காரில் வீடு திரும்பினார்.

அண்ணா இரு கோடுகள் போட்டிருந்தார்.

ஒன்று: குடும்பத்தார் கட்சிக்குள் வராதபடி பார்த்துக்கொண்டார்.

இரண்டு: ஆட்சி அதிகாரத்திற்குள் கட்சி வராதபடி பார்த்துக்கொண்டார்.

அப்படிப்பட்ட குறைந்த உருவம் கொண்ட; உயர்ந்த உள்ளம் கொண்டவர் அண்ணா. அதனால்தான் திராவிடத் தம்பிகளுக்கு நேற்றும், இன்றும், நாளையும் அவர் அண்ணனாகத் திகழ்ந்தார்... திகழ்கிறார்... திகழ்வார்!

நான் முதன்முதலில் பணிபுரிந்த வாத்யார் படம்....

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

__________

போட்டியில் ஜெயிச்சேன்!

cc

அமெச்சூர் நாடக மன்றங்களின் நாடகப் போட்டி, பெரியார் திடலில் நடக்கப்போவதாக சேதி வந்தது. கிட்டப்பா கலையரங்கமும் கலந்துகொண்டது. என்னையே ஹீரோவாக நடிக்கக் கேட்டனர். "எது அன்பு' எனும் அந்த நாடகத்தில் நடிக்க நானும் ஒப்புக்கொண்டு ஒத்திகைக்குச் சென்றேன். அந்த நாடகத்தின் கதாநாயகி யாக நடிக்க தர்மாம்பாள் என்ற பெண்மணி வந்திருந்தார்.

ஒத்திகையின்போது மிகச் சத்தமாகப் பேசி, என்னை வருத்திக்கொண்டு நடிப்பேன். நான் நன்றாக நடிப்பதாகவும், வசனங்களை தெளிவாக உச்சரிப்பதாகவும் பாராட்டுவார் கள் சக கலைஞர்கள். நான் அவ்வளவு சத்தமாக வசனம் பேசி நடித்ததற்குக் காரணம்... மற்றவர்களுக்குத் தெரியாது. ஒத்திகைக் கூடத்தின் எதிர்வீடு டைரக்டர் ஏ.ஸி.திருலோகசந்தர் வீடு. ஒருவேளை என் குரலைக் கேட்டு, "யாரது?' என ஜன்னல் வழியாக என் நடிப்பைப் பார்த்து, எனக்குத் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருவார் என்றொரு நம்பிக்கை. ஆனால் அப்படி ஒரு நிலை வரவேயில்லை.

எங்களின் "எது அன்பு' நாடகம் பெரியார் திடலில் நாடகப் போட்டியில் அரங்கேறியது. நாடகக் கதை பாராட்டப்பட்டது. எனக்கு சிறந்த நடிகருக்கான பரிசு கிடைத்தது. எனக்கு அந்தப் பரிசை வழங்கியவர் "தினத் தந்தி' அதிபர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். அந்த மேடையில் திரு.சோ அவர்களும் இருந்தார்கள்.

அன்று என்னுடன் "எது அன்பு' நாடகத்தில் கதாநாயகியாக நடித்த அம்மையார், அதன்பின் "காகிதப் பூ' நாடகத்தில் நடித்தார். அவர்தான் கலைஞரின் வாழ்க்கைத் துணைவி... கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள்.